காதல் தூரல்...!

நேர் கொண்ட பாதை...!
ஒற்றை வழித்தடம்...!
எனக்கும் உனக்கும்...!
வளைந்ததில்லை...
நெளிந்ததில்லை...
எதையும் நினைத்து
அலைந்ததில்லை...!
ஈரமில்லாமல்
காய்ந்தபோதிலும்...
வெயிலில்
வெந்தபோதிலும்...
வாடியதில்லை
நீயும் நானும்...!
காய்ந்த சருகில்
கவன்
கொண்டு எரிந்தது போல்....
சட்டென விழுந்தது....
முதல் மழைத் துளி
உன்மீதும்...
அழகிய பாவை விழி
என்மீதும்...!
முதல் தூரலும்...
முதல் காதலும்....
எளிதாய்
பற்றிவிட்டது
என்னையும் உன்னையும்...!
வறண்டு
கிடந்த
மனதும், மண்ணும்
சுகமாய் ஈரமானது
மழைப் பாவையால்..!
மண் வாசமும்
பெண் நேசமும்
வேர் முதல் ஊற்றெடுத்து
உயிர் வரை பாய்ந்தது...!
ஆனால்...!
பந்தி பரிமாறி
வாய்
கட்டிய கதையாய்
ஆனது
எனக்கும் உனக்கும்...!
ம்ம்ம்...சோ'வென கொட்டி
தீர்க்க
வேண்டிய
தூரலும் பார்வையும்
வந்த வழி கடந்து செல்ல....
தூரலும் பார்வையும்
மீண்டும்
கிடைக்குமா..?
என
மேகம் நோக்கி நீயும் - அவள்
முகம் நோக்கி நானும்...!
மேகம் சிந்திய
முதல் வியர்வை....
குளமாய் உன் ஞாபகத்தில்..!
அவள் செலுத்திய
முதல் பார்வை....
ஆழமாய் என் இதயத்தில்...!
"அமைதியை கெடுப்பதே
மண்ணுக்கும்
பெண்ணுக்கும்
வேலையா..?" - என
நீயும் நானும்
கடிந்தது
இன்னும் என் ஞாபகத்தில்...!
ம்ம்ம்....
கடக்கட்டும்
காலம்...!
நடக்கட்டும்
நாட்கள்...!
மறவாதது...மாறாதது...
முதல் மழையும்...!
முதல் காதலும்...!
என ஊருக்கு உரைப்போம்
என் "தெரு" நண்பா...!
------------ தாமரையான் !