வறட்சியை மட்டும்
குத்தகையாய்
கொண்ட கறுப்புப் பிரதேசம்...!
சூரியன் புதையுண்ட
பூமி போல்
கொதித்த தட்ப வெப்பம்...!
வறண்டு துவண்டு
போன
உயிர் நாள நதிகள்...!
அறுவடை செய்ய
ஏதுமின்றி
உறங்கும் விளைநிலங்கள்...!
வறட்சியின் ஆட்சியில்
அழிவின்
வாழ்வு அமோகம் அங்கு...!
இருப்பினும்
திடீரென சிவந்தது
அந்த
வெண்ணிற வானம்...!
செந்நிற மேகங்கள்
சூழ
கொட்டியது அங்கு மழை...!
மழை நீர் விழுந்து
நிலம்
நனைத்த போதிலும்
வளம் இல்லை...!
ஆம்...!
நீர் நனைத்தும்
வளப்படாத
அந்த அதிசய தேசம்...
ஏழையின் கன்னம்...!
பசி என்னும்
தட்பவெட்பம்
மாற்றிய வானிலையில்
உருவான கண்ணீர் மழை...!
வானக் கண்களில்
உருவாகி
கன்ன தேசத்தில்
பெய்த
சுட்ட மழை
அது...!
வறுமையின் பிள்ளைகள்
ஏராளம்
இங்கு...!
இவர்கள் உடம்பில்
எஞ்சியது
உயிரில் ஒரு பங்கு...!
சுவாசத்தின் சூட்டிலும்
கண்ணீரின் சூட்டிலும்
உயிர் வாழும்
ஏழை எஜமான்கள் இவர்கள்...!
வயிற்றில் வெறுமையும்
பார்வையில் கருமையும்
வாழ்க்கையில் வறுமையுமே
இன்றுவரை
இவர்களின் உடைமை...!
இந்த நிலையம் மாறும்...!
ஆனால்
அதுவரை இவர்கள்
உண்ணுவதை
மறவாமல் இருந்தால்
மகிழ்ச்சி...!
இயற்கை அன்னையின்
தராசு சமம்
என்பதை அறியும்
வேளையில்
தற்கொலைக்கு
முயல்வாள்
அவள் என்பதில் ஐயமில்லை...!