அசைவம்
பின்
கழுத்தில் அமர்ந்து
சங்கைப்
பிரித்துண்ணும் அரக்கர்களே...!
தாயைப் போல்
உயிரை
விதையிட்டு....
உரமிட்டு...
பின் தானே
வேருடன் அறுக்கும் வெறியர்களே...!
கேட்பார் இல்லாத ...
அழகிய மங்கையரின்
பச்சைத்
தலை மயிரை
தனக்கென வெட்டும் தனவான்களே...!
உணவுக்கு வெட்டியது
போதாதென... பின்
உலைக்கு எரியாய்
வீட்டிற்கு 'நிலை'யாய்
என
வெட்டி அடுக்கும் வேங்கைகளே...!
ஆக்குபவன் நீ என்பதால்...
அழிப்பதும் உம் உரிமையோ...?
இறந்தவன் அனைவரும்
இவ்வுலகம் மீண்டால்...
அறுத்தவன் உன் கதி...?
அரிவாளைப் பதம் பார்த்து
சிரம் - புறம் பிரித்து
குருதியால் பூமியை
நனைப்பவன் மட்டுமே
"அசைவன்"
எனக் கூற
உனக்கென்ன உரிமையுள்ளது...?
முதலில் கூறிய தென்னையும்
பின் சொன்ன நெர்ப்பயிரும்
கூந்தல் இழக்கும் வாழையும்
உன் வீட்டில்
மேசையாய், சன்னலாய்
கதவை
நிற்கும் மர மக்கள்
வந்து கூறட்டும்...
நீ "சைவம்" என்று...!
அதுவரை....
"நான் சைவம்"
எனக் கூறி
மாறு தட்டாமல்
புத்தியைக்
கூறு தட்டு...!
உயிர் - அது
விலங்கோ... தாவரமோ....
கொல்லும்
எவனுக்கும்
சைவம் - அசைவம்
எனப்
பிரித்துப் பகுப்படுத்தும்
உரிமையுமில்லை...!
விளக்கம் தந்து
விலகிக் கொள்ளும்
தகுதியுமில்லை..!
இயற்கையின் பிடியில்
உலகம்
உள்ள வரை...
உனக்கும் எனக்கும்
நட்பு துளிரும்...!
இல்லையென்றால்
நீ என்னையும்
நான் உன்னையும்
தின்னலாம் விதி நேர்ந்தால்...!
-------------------- தாமரையான்...!